Friday, July 11, 2008

MGR's WILL FORGED -Says MGR's Blood Relation

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்;அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்'' என்று பாடிய எம்.ஜி.ஆரின் புகழை இன்றுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. `எட்டாவது வள்ளல்' என்றே தன் விசுவாசிகளால் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் தனது மனைவி ஜானகி அம்மாளின் அண்ணன் மகன்கள், மகள்கள் பெயரில் எழுதிய உயிலே ஒரு பிரச்னையாகி, கடந்த மாதம் ஒரு கொலையில் முடிந்து பரபரப்புச் செய்தியானது.
இந்த நிலையில், `எம்.ஜி.ஆரின் கௌரவத்துக்கும் புகழுக்கும் இழுக்கு ஏற்படும் வகையில் பிரச்னையை உருவாக்கி வரும் அந்த உயிலை எம்.ஜி.ஆர்.எழுதவே இல்லை.அது முற்றிலும் போலியாகத் தயாரிக்கப்பட்டது'என்ற பகீர் புகார் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன்களும் மகள்களும்தான் இந்தப் பரபரப்புப் புகாருடன் புறப்பட்டிருக்கிறார்கள்.
அண்ணாநகரில் உள்ள சக்கரபாணியின் மகன் எம்.சி.சுகுமாரின் இல்லத்தில் எம்.சி.ராமமூர்த்தி, சுகுமார், எம்.சி.சந்திரன், எம்.சி.விஜயகுமார்,எம்.சி.ராஜேந்திரன் எம்.சி.விஜயலட்சுமி வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்தோம். `எந்த அடிப்படையில் அந்த உயில் போலியானது என்கிறீர்கள்?' என்றோம்.
``எங்கள் சித்தப்பா (எம்.ஜி.ஆர்.) எழுதியதாகக் கூறப்படும் அந்த உயிலில் அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டம், ஆர்க்காடு சாலையில் உள்ள வீடு, சத்யா தோட்டம், ஆலந்தூர் மார்க்கெட்டில் உள்ள சில கடைகள், சத்யா ஸ்டூடியோ ஆகிய சொத்துக்கள் அடங்கும். இதில், ஆர்க்காடு சாலையில் உள்ள வீடு அந்த உயில் எழுதப்பட்ட நாளில் (18.1.1987) அவரது மனைவி ஜானகி அம்மாள் பெயரில்தான் இருந்தது. தன் மனைவி பெயரில் உள்ள சொத்தை அவர் எப்படி மற்றொருவருக்கு எழுதி வைக்க முடியும்.? அடுத்ததாக, சத்யா ஸ்டூடியோவைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க.வுக்கே சொந்தம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது மறைவுக்குப் பின் கட்சி இரண்டாகப் பிரிந்தாலும் பின்னர் ஒன்றுபட்ட அ.தி.மு.க. என்று ஆன பிறகு, அதைக் கட்சிக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அந்த உயிலின் படி சொத்து தங்களுக்குத்தான் என்று சொந்தம் கொண்டாடுபவர்கள் யாரும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லையே ஏன்?
சர்ச்சைக்குரிய அந்த உயிலில் எம்.ஜி.ஆரின் கையெழுத்தை வேறு யாரோதான் போட்டிருக்கிறார்கள். 1977-ம் ஆண்டு எனது தந்தையும் சித்தப்பாவும் ஒரு சொத்தை குத்தகைக்கு விட்ட ஆவணத்தில் போட்டிருக்கும் கையெழுத்துக்கும் உயிலில் உள்ள கையெழுத்துக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. (வித்தியாசத்தை நம்மிடம் காண்பிக்கிறார்) ஆரோக்கியமான நல்ல உடல்நிலையில் இருந்தபோது அவர் குத்தகைப் பத்திரத்தில் தன் கையெழுத்தைப் பெரிதாகப் போட்டிருக்கிறார். ஆனால் நோய்வாய்ப்பட்டு, மிகுந்த சிரமத்தில் இருந்த நிலையில் முன்பு போட்டதைவிட சிறியதாக கையெழுத்துப் போட்டிருக்க முடியாதே!
எதுவுமே எழுதமுடியாத நிலையில் இருந்த எங்கள் சித்தப்பாவால் உயிலை எழுதியிருக்க முடியாது. உயிலில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல்கள் உள்ளன. திருத்தப்பட்ட ஒரு இடத்தில் கூட சித்தப்பாவின் கையெழுத்து இல்லை. இடைச்செருகலாக சில வாக்கியங்களை ஆங்காங்கே சேர்த்திருக்கிறார்கள். அதிலும் சொத்து விவகாரத்தில் அடிக்கடி அடிபடும் ராஜேந்திரன் (ஜானகியின் சகோதரர் நாராயணனின் மருமகன்)பெயரைக்கூட இடைச்செருகலாகத்தான் உயிலில் சேர்த்திருக்கிறார்கள். 1986 ஏப்ரல் மாதம் எழுதிய உயிலை ரத்து செய்துவிட்டுத்தான் இந்த உயிலை சித்தப்பா எழுதியிருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் சின்னச் சின்ன மாறுதல்கள் கூட ஏதோ உள்நோக்கத்துடன் சேர்க்கப்பட்டிருப்பது இரண்டையும் படித்தாலே சாதாரணமாகப் புரியும்.
அதே ஆண்டு (1986)மார்ச் மாதம் என் தம்பி விஜயகுமாரின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தவர், சித்தப்பாதான். கடைசி காலம் வரையிலும் எங்களை சந்தித்துப் பேசுவதை வழக்கமாகவே வைத்திருந்த சித்தப்பா,எங்களைத் தவிர்த்துவிட்டு ஓர் உயிலை எழுதியிருக்கவே முடியாது. சித்தப்பாவுக்கு சிறுநீரகம் கொடுத்த எங்கள் சகோதரி லீலாவதியை உலகமே அறியும்.கொச்சியில் உள்ள லீலாவதியும் மும்பையில் வசிக்கும் மற்றொரு சகோதரியான சத்யபாமாவும் எங்களுடன் சேர்ந்து இப்பிரச்னையில் குரல் கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 1966-ல் கொண்டுவரப்பட்ட புதிய வருமான வரிச் சட்டத்தால் எங்கள் அப்பாவும் சித்தப்பாவும் சொத்துக்களை பாகப்பிரிவிணை செய்து கொண்டார்கள்.
மொத்தச் சொத்துமே இருவரும் சேர்ந்து சம்பாதித்ததுதான். இந்நிலையில், பெயரளவுக்குத் தன் பெயரில் பிரித்துக் கொண்ட சொத்துக்களை தனது மனைவியின் உறவினர்களுக்கு மட்டுமே எப்படி எழுதி வைத்திருப்பார்? அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய சித்தப்பாவுக்கு 1984 அக்டோபரில் இருந்து 1987 டிசம்பர் 24-ம் தேதி (இறுதிக் காலம்) வரை என்னவெல்லாம் நடந்தது என்பதைக் கூர்ந்து கவனித்தாலே இந்த உயில் எப்படி உருவாகியிருக்கும் என்பது அம்பலமாகிவிடும். இதற்கிடையே, 1986 அக்டோபரில் சித்தப்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். `என் கையெழுத்தை போலியாகப் போட்டு சிலர் மோசடி செய்வதாக அறிகிறேன். என் கையெழுத்திட்ட ஆவணங்களைக் காட்டினால் என் உறவினர்கள் மட்டுமின்றி என் மனைவியே ஆனாலும் என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம்'' என்றனர்கோரஸாக.
`இருபது ஆண்டுகள் மௌனமாக இருந்துவிட்டு, இப்போது இந்த விவகாரத்தை வெளிப்படுத்த என்ன காரணம்?' என்று கேட்டோம். ``உயிலை நடைமுறைப்படுத்திய காலத்திலேயே மோசடி நடந்திருப்பதை எங்களால் உணர முடிந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள சித்தப்பாவின் விசுவாசிகள் மத்தியில் அவரது கௌரவத்தைக் குலைக்க வேண்டாம் என்ற நல்ல எண்ணத்திலேயே அமைதியாக இருந்தோம். தவிர, நாங்கள் அப்போதே எதிர்த்திருந்தால் சொத்துக் கிடைக்காத ஆதங்கத்தில் உளறுவதாக யார் வேண்டுமானாலும் எங்கள் மீது புழுதியை வாரியிறைத்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த சொத்து விவகாரம் கூலிப் படையை ஏவி ஓர் உயிரைப் பறிக்கும் அளவுக்குப் போய்விட்டதைச் சகிக்க முடியாமலேயே இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மௌனத்தை உடைத்திருக்கிறோம்'' என்றார் எம்.சி.சுகுமார்.
இந்த ஆதாரங்களைக் காட்டி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவீர்களா? என்று கேட்டோம்.
நாங்கள் முன்வைத்துள்ள இந்த ஆதாரங்கள் தவறானவை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் எங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரட்டும். அவர்களுக்கு எதிரான பல ஆதாரங்களையும் சில விசித்திரமான நீதிமன்றத் தீர்ப்புகளையும் நாங்கள் அம்பலப்படுத்துவோம். அவற்றைச் சந்திக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும்''என்றார் எம்.சி.விஜயலட்சுமி.
``தங்களை எம்.ஜி.ஆரின் வாரிசுகள் என்று இதுவரையில் அறிவித்து வந்தவர்கள் யாருமே உண்மையான வாரிசுகள் இல்லை. ரத்த பந்தமுள்ள வாரிசுகள் நாங்கள் மட்டுமே. எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன், மகள் என்று சிலர் தங்களைத் தாங்களே இத்தனை நாட்கள் கூறி வந்ததும் உண்மைக்கும் சட்டத்துக்கும் புறம்பானது. ஏனென்றால், எங்கள் சித்தப்பா யாரையும் தத்தெடுக்கவும் இல்லை. வளர்க்கவும் இல்லை. அவர் உயிருடன் இருந்த வரையில் ராமாவரம் தோட்டத்துக்குள் நுழைந்தவர்கள் எல்லோருமே அவரது பிள்ளைகளாகத்தான் பாவிக்கப்பட்டார்கள்'' என்று ஆவேசமாக முடித்துக் கொண்டனர் சக்கரபாணியின் வாரிசுகள்.
எம்.ஜி.ஆரின் உயில் விவகாரம் ஓர் உயிரைப் பறித்துவிட்ட நிலையில், அந்த உயிலே போலியானது என்ற அவர்களின் புகாருக்குப் பதில் சொல்லப் போவது யார்?

Article From "Reporter Magazine"

Related Posts Plugin for WordPress, Blogger...